காரைக்கால் முன்னாள் அமமுக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கந்துவட்டி தொல்லையால் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், 14 பக்கம் கடிதம் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்குபேட் தேனூரைச் சேர்ந்தவர் தர்பாராண்யம் வயது52. காரைக்கால் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். மேலும், அமமுக கட்சிக்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வேட்பாளராக இருந்த நிலையில் திடீரென்று அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் இவர் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலும் நஷ்டம் ஏற்பட்டு அதிகப்படியான கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்குப் பணம் வாங்கியுள்ளதாகவும், தினசரி கடன் கொடுத்தவர்கள், தர்பாராண்யத்திற்கு போன் செய்து மிரட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நேரில் வந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவுபடுத்திப் பேசி கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘ஒருவர் குடி அடிமைத்தனத்தில் இருப்பதற்கான அறிகுறி என்ன? – மனநல மருத்துவர் ஸ்ரீராம்’
இதனால், மன உளைச்சலிலிருந்துவந்த தர்பாரண்யம். வீட்டில் உள்ள மின்விசிறியில் மின் ஒயர் ஒன்றில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி இளவரசி அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் காரைக்கால் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டில் 14 பக்க கடிதம் இருந்ததாகவும், இது குறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் இளவரசி அளித்த புகாரில் கந்துவட்டி கொடுமையால் தான் தன் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தர்பாரண்யத்திடம் கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார் அதில் கந்து வட்டியால் தான் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்ததையடுத்து, உயிரிழப்பு வழக்கை, மிரட்டல், உயிரிழப்புக்கு தூண்டுல் உள்ளிட்ட பிரிவின் கீழான வழக்காக மாற்றி காரைக்கால் போலீசார் விசாரித்து வருவதாக மாவட்ட காவல் முதுநிலை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் பிரமுகர் கந்துவட்டியால் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் காரைக்காலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.








