‘இருக்கையில் அமரக்கூடாது என்று யாரும் கூறவில்லை’ – சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை இருக்கையில் அமரவைக்காமல் தரையில் அமரவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை இருக்கையில் அமரவைக்காமல் தரையில் அமரவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை இருக்கையில் அமரவைக்காமல் தரையில் அமரவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்தும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நரிக்குறவ இன மக்கள் அளித்த மனு குறித்தும் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் விளம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நரிக்குறவர் மக்களுக்கு நிலையான இருப்பிடத்தினை ஏற்படுத்துவதற்காக இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.06.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்குச் சிவகங்கை பழமலை நகரைச் சேர்ந்த 23 நபர்கள் மற்றும் தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 நபர்கள் அடங்கிய 2 குழுவினர் வருகை புரிந்தனர். அதில் 23 நபர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கியது தொடர்பாக விளக்கம் கோரி மனு அளித்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு 1 சென்ட் இடம் வீதம் 107 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு இருந்த நிலையில் வீடு கட்டுவதற்குத் தேவையான அளவு இடவசதி இல்லாத காரணத்தினால் வழங்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டு, கூடுதல் இடவசதியுடன் கூடிய வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு 2021 டிசம்பரில் 2½ சென்ட் வீதம் 24 நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘காரைக்கால் முன்னாள் அமமுக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்; நடந்தது என்ன?’

அதனைத்தொடர்ந்து 12.05.2022, 20.05.2022 மற்றும் 24.05.2022 ஆகிய தினங்களில் 3 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 08.06.2022 அன்று 91 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. நடைபெற்ற சிறப்பு முகாம்களின் போது தொழிலுக்காக வெளியூர் சென்று இருந்தவர்கள், வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் விடுபட்டவர்கள் வீட்டுமனைப்பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்களின் குழுத்தலைவர் மாணிக்கம் அவர்களுடன் வருகை தந்தனர். குழுத்தலைவர் மற்றும் 6 நபர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களைச் சந்தித்து மனு அளித்தனர். அச்சமயத்தில் மீதமுள்ள நபர்கள் தரைதளத்தில் தங்களது குழுத்தலைவர் மற்றும் தங்களது குழுவினருக்காகக் காத்திருந்திருந்தனர். அவர்களை இருக்கையில் அமரக்கூடாது என்றோ, தரையில் உட்காருமாறோ யாரும் வற்புறுத்தவோ, நிர்ப்பந்திக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை. அதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை எனத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், நரிக்குறவர் குழுத்தலைவர் மாணிக்கத்தை தொலைப்பேசியின் வாயிலாகத் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சம உரிமை மற்றும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். நரிக்குறவர் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது (29.06.2022) சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ”சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது. சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாக” தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/annamalai_k/status/1541689921760419840

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.