ஒருவர் குடி அடிமைத்தனத்தில் இருப்பதற்கான அறிகுறி என்ன? – மனநல மருத்துவர் ஸ்ரீராம்

தமிழ்நாடு அரசு விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குடி மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவர் ஸ்ரீராம் நியூஸ் 7 தமிழுக்குப்…

தமிழ்நாடு அரசு விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குடி மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவர் ஸ்ரீராம் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியின்போது தெரிவித்தார்.

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூத்த உதவி பேராசிரியராகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனநல மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் ஸ்ரீராம் நமது நியூஸ் 7 தமிழுக்குச் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மது கஞ்சா சிகரெட் புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் பழக்கத்தில் உள்ளது. இதில் எது போதை பழக்கம், எது போதை அடிமை பழக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருட்கள் பயன்படுத்தும் அனைவரும் போதை பழக்க அடிமைகள் அல்ல, குறிப்பிட்ட நேரத்தில் தினமும் குறிப்பிட்ட போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதேபோன்று பகல் நேரங்களில் அடிக்கடி போதைப் பொருள்களை உபயோகப்படுத்துபவர்கள் மற்றும் தினசரி போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள், ஏதாவது ஒரு நாள் போதைப் பொருள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பதட்டம், படபடப்பு, தூக்கமின்மை, வாந்தி எடுப்பது உடல்நிலை பாதிக்கப்படுவது உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவர் மோசமான பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்.

அத்துடன் போதைப்பொருள் உபயோகப்படுத்துபவர்கள் ஒரு சில நாட்கள் போதைப்பொருள் உபயோகப்படுத்த விட்டால் அதேநினைவாக இருப்பதும், அதையே சிந்தித்துக் கொண்டிருப்பதும், அதற்காகப் போதைப் பொருளைத் தேடி அலைவது போன்ற செயல்களைச் செய்வதும் குடி அடிமைத்தனத்தில் இருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகும். முக்கியமாக ஒரு சிலர் எவ்வளவு குடித்தாலும் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது அவர் வலுவான அவர் என்று அர்த்தமல்ல. அதற்கு மாறாக அவர் குடிக்கு அடிமையாகி விட்டார் என்றுதான் அர்த்தம். இதற்கு அவர் உடனடியாக பார்க்க வேண்டியது ஒரு மனநல மருத்துவரைத் தான் இதைப் பொதுமக்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தலை முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் உண்டு என்றால் அது குடித்தான் குடிப்பதினால் சுகர், ரத்த அழுத்தம், வலிப்பு, ஈரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, குடல் மற்றும் வாயில் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அபாயம் குடிப்பழக்கத்தினால் ஏற்படும்.

அடுத்தாக மனவியாதிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. உதாரணமாக எந்த ஒரு காரியமும் செய்ய முடியாதபடி மனபதட்டம் ஏற்படும். போதையினால் 10 ல் 8 பேர் உயிரிழப்பு  முயற்சி செய்கின்றனர். இயற்கையில் உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் தைரியம் வராது. குடிப்பழக்கத்தினால் மட்டுமே  உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தைரியம் வருகிறது. ஒரு குடும்பம் மற்றும் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாகக் குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். அடுத்ததாக மிக முக்கியமாகக் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கூடியது சந்தேகம். குடிப்பழக்கத்தில் இருப்பதனால்தான் சந்தேகத்தின் பேரில் மனைவியைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் செய்யத் தூண்டுகிறது. எனவே இந்த நாளில் உடலையும் குடும்பத்தையும் கெடுக்கும் இந்த குடிப்பழக்கத்தை விட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் வெளிவரவேண்டும் என்ற முயற்சியை அனைவரும் செய்ய வேண்டும்.

இதுபோன்று குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக அரசு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவுக்கு உடனடியாக செல்ல வேண்டும். பெரும்பாலான பொதுமக்கள் குடிப்பழக்கத்திற்கு ஏன் மனநல மருத்துவத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மனநல மருத்துவர் தான் குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மருத்துவம் அளிக்க முடியும் முதலில் இதனைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனநல மருத்துவர் என்றாலே மன நோய்க்கு மருத்துவம் மட்டுமே பார்ப்பவர் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. இது தவறான நம்பிக்கை, இது உண்மை இல்லை, நாங்கள் தான் மனநல மருத்துவமும் பார்க்கிறோம், நாங்கள் நான் குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மருத்துவம் பார்க்கின்றோம். இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மனநல பகுதிக்கு வருவதற்குத் தயக்கம் இருக்க வேண்டாம். குடும்பத்திற்காகத் தனது குழந்தைகளுக்காக மனநல பகுதிக்கு வரும் பொழுது அவருக்கு உதவி செய்திட நாங்கள் தயாராகக் காத்திருக்கிறோம்.

அண்மைச் செய்தி: ‘மும்பை கட்டட விபத்து – பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு’

அதேபோன்று எங்களிடம் வரும் குடிப் பழக்கம் உடையவர்கள் இடம் போதை பழக்கம் உள்ளவர்களிடம் முதலில் முழு பரிசோதனை செய்யப்படும். உதாரணமாக அவர் குடிக்கு எந்த அளவு அடிமையாகி இருக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். அத்துடன் குடிப் பழக்கத்துடன் அவரது உடலில் வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா குறிப்பாகச் சர்க்கரை நோய், இதயநோய், குடல் பாதிப்பு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்று உடல் முழு பரிசோதனை செய்து கண்டறியப்படும். அப்படி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இல்லையென்றால் அவர் வெறும் குடிக்கு மட்டும் அடிமையாக இருப்பதாகத் தெரியவந்தால் வெளி நோயாளியாகவே தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் குடிநோயாளிகள் இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்ற முனைப்புக் காட்டினால் போதும் மருத்துவம் நாங்கள் செய்து கொள்வோம். பல ஆயிரம் பேர் சிகிச்சையினால் போதை பழக்கத்திலிருந்து வெளி வந்துள்ளனர். எவ்வளவு மோசமான குடிக்கு அடிமையான நிலையிலிருந்தாலும் அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவரிடம் முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக வெளியே வரமுடியும். பொதுவாக மனநல மருத்துவம் பற்றி பொது மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளது. உதாரணமாகக் குடிப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த கூடாது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிறுத்த வேண்டும். ஆனால் மருத்துவமனையில் மனநல மருத்துவர்கள் உடனடியாக குடிப் பழக்கத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என்பது முற்றிலும் புரளி. மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளோடு உடனடியாக குடியை நிறுத்துவது தான் சரியான சிகிச்சை முறையாகும். குடியை நிறுத்துவதற்கு வழங்கக் கூடிய மருந்து மாத்திரைகளால் உடல் ஆரோக்கியம் மேம்படுமே தவிர எந்த விதத்திலும் உடலுக்குப் பாதிப்பு ஏற்படாது.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் குடி நோயாளிகளை மீட்கத் தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உதாரணமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குடி மறுவாழ்வு மையம் என்ற பிரிவினை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதுபோன்ற குடி மறுவாழ்வு மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால் குடிக்கு அடிமையானவர்கள் தற்போது உள்ள நிலையைக் காட்டிலும் அதிகமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குத் தயக்கம் காட்டாமல் வரக்கூடிய சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

தூத்துக்குடியை பொருத்தமட்டில் கடற்கரை பகுதிகளில் வழக்கமான போதைப் பொருட்கள் பயன்பாடு மட்டுமல்லாமல் கடலில் சங்கு எடுக்கும் தொழில் செய்பவர்கள் ஆழ்கடலில் மூழ்கி தொழில் செய்வதனால் உடலில் ஏற்படும் வலியைப் போக்கிக் கொள்வதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மருந்துகளை யாருடைய அறிவுரையும் இல்லாமல் போதைக்காக தாங்களே மெடிக்கல் கடைகளில் வாங்கிச் சென்று நரம்பு மூலமாகப் போதைக்காகச் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கமும் உள்ளது. இதுபோன்ற போதையில் சிக்கிக்கொண்டு உள்ளவர்களுக்கும் மனநல பிரிவினில் சிறந்த சிகிச்சை முறை மூலமாக அவர்களைப் போதையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.