அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மருத்துவ நிபுணர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தீவிர கொரோனா தொற்றில் இருந்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பில் இருந்தும், உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா பரவலானது கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக வம்சாவளியும், அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும், ரேபிட் டெஸ்ட் மற்றும் பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்றுக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும், அவர் தனது இல்லத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அவர் வீட்டில் இருந்தே பணியாற்றுவார் என்றும் , தொற்றில் இருந்து குணமடைந்தவுடன் பணிக்குத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அவர் தொடர்பில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
3 டோஸ் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் சில வாரங்களுக்கு முன்பும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 2021இல் பதவியேற்ற நாளுக்குப் பிறகும் செலுத்திக் கொண்டார். மேலும், அக்டோபர் இறுதியில் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார். ஏப்ரல் 1ஆம் தேதி கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.