தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று பார்வையிட்டார். கொரோனா தடுப்பு நடவடிகைகள் அனைத்தும் தீவிரமாக பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப் பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச் செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.







