பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வறுமையால் வேலைக்கு சென்ற மாணவி – உயர் கல்விக்கு உதவி கரம் நீட்டிய கமல்!

பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வறுமையால் வேலைக்கு சென்ற மாணவியின் உயர் கல்விக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உதவி கரம் நீட்டியுள்ளார்.

படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார்.

இது தொடர்பாக மநீம கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில்,  “இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர். வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.

ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா.

இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.