அரசியலை வியாபாரமாக்கியவர்களுக்கும், தனக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்துவிட்டார்களே என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில், அனைத்து கட்சி தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, கர்வத்துடன் அரசியல் செய்ய வேண்டிய தன்னை, மக்கள் கெஞ்ச வைத்துவிட்டதாக கூறிய அவர், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை காட்டுவதற்காகவே அரசியலுக்குள் வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்துபேசிய அவர், அரசியலை வியாபாரமாக்கியவர்களுக்கும், நாளைய தலைமுறைக்காக பாடுபடக் கூடியவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறுபவர்கள், செலவு கணக்குகளை மக்களிடம் தெரிவிப்பார்கள் என்றும் கூறினார்.







