அரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார்.
குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் நடிகர் சித்து சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்தது பிப்லி சுங்கச்சாவடி அருகே, நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் சித்து சமூக செயற்பாட்டாளராக இருந்து வந்தார். டெல்லியில். வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அப்போது, டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஒரு பிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. டிராக்டர் பேரணியில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.
விவசாயிகளை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர், தான் செங்கோட்டையில் சீக்கியர்களில் கொடியை ஏற்றியதாகவும் ஆனால், தேசிய கொடியை அகற்றவில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.







