“முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இடம்…

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறின.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து, மநீம கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில், சமகவும், ஐஜேகேவும் இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில், புதிய முயற்சியை எடுத்துள்ளதாக கூறினார். ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிட உள்ளதாக அறிவித்தார். வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் வேட்பாளர் நேர்காணல் மார்ச் 1ஆம் தேதியும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தான் தான் என்றும் அந்த முடிவில் மாற்றமில்லை எனக் கூறிய அவர், அமமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.