தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள ரஜினி, கமல், ஆகியோர் ஒரு கட்டத்திற்கு பின் ஆக்ஷ்ன் படங்களிலேயே பெரும்பாலும் நடிக்கத் தொடங்கினாலும் அதற்கு முன்பு உருக வைக்கும் காதல் படங்களிலும் நடித்து மெகா ஹிட்டுக்களை கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களாக விளங்கும் அந்த படங்களின் மலரும் நினைவுகளை இந்த காதலர் தினத்தில் நினைவுகூறுவோம்.
இந்திய திரையுலக காதல் சாம்ராஜ்யத்தின் அரியாசனத்தில் 80களில் அமர்ந்த காதல் காவியம்தான் இந்த ”ஏக் துஜே கேலியே”. காதலுக்கு மொழி பேதமெல்லாம் கிடையாது என நிரூபிப்பதுபோல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரசிகர்களின் மனதை உருக்கியது இந்த இந்திப்படம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் இந்திப்படம் ஏக்துஜே கேலியே. தெலுங்கில் தமது இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மரோச்சரித்திரா கதையை அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த கமல்ஹாசனை வைத்து இந்தியில் கே.பாலச்சந்தர் மறுஉருவாக்கம் செய்தார். அந்த படம்தான் ஏக்துஜே கேலியே. தமிழ் இளைஞருக்கும் வட இந்திய பெண்ணுக்கும் மொழி எல்லைகளை தாண்டி உருவாகும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரதி அக்னிஹோத்ரி நடித்திருந்தார். உண்மையான காதல் எந்த ஒரு பிரிவிலும் உடையாது என்பதை உருக வைக்கும் காதல் காட்சிகளுடன் ஏக் துஜே கேலியேவில் சொல்லியிருந்தார் கே.பாலச்சந்தர். எல்.வி.பிரசாத் தயாரிப்பில் 1981ம் ஆண்டு ஜூன் 5ந்தேதி வெளிவந்த இந்த படம் பாலிவுட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலும் மாபெரும் வெற்றி பெற்று 40 ஆண்டுகளுக்கு முன்பே பான் இந்தியா படமாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு லக்ஷிமிகாந்த் பியாரிலாலின் இசையும் பெரும் உதவி புரிந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தி திரையுலகில் பாட ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். அவர் பாடுவதற்கு லக்ஷ்மிகாந்த் பியாரிலால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கே.பாலச்சந்தர் வலியுறுத்தலின் பேரில் எஸ்.பி.பி. பாட வைக்கப்பட்டார். தாங்கள் நினைத்தது தவறு என லக்ஷிமிகாந்த் பியாரிலால் நினைக்கும் அளவிற்கு எஸ்.பி.பி. குரலுக்கு இந்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தனது முதல் இந்தி படத்திலேயே சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெற்றார்.
கோலிவுட்டில் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் வர்ணிக்கப்பட்டார் என்றால் காதல் இளவரசனாக பட்டம் பெற்றவர் கமல்ஹாசன். அந்த அளவிற்கு அவரது முந்தைய கால படங்களில் காதல் ரசம் சொட்டும். 70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் பல காதல் காவியங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த மரோச்சரித்திரா அதன் இந்தி மறுஉருவாக்கமான ஏக் துஜே கேலியே ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெற்ற கமலின் காதல் காவியங்கள். எனினும் கமல் நடித்த நேரடி தமிழ் படங்களில் வாழ்வே மாயம் கோலிவுட்டின் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத காதல் காவியம். சிவாஜிக்கு ஒரு வசந்த மாளிகை என்றால் கமல்ஹாசனுக்கு வாழ்வே மாயம் எனக் கூறப்படும் அளவிற்கு வாழ்வே மாயம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கில் 1981ம் ஆண்டு வெளிவந்த பிரேமாபிஷேகம் என்கிற படத்தின் தமிழ் மறுஉருவாக்கமான இந்த படம் 1982ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று வெளியானது. ரஜினியை வைத்து பில்லா என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி கமலை வைத்து உருகவைக்கும் காதல் படமான வாழ்வே மாயத்தை இயக்கியிருந்தார். கங்கை அமரனின் இசையில் வாழ்வே மாயம் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். குறிப்பாக ”நீலவான ஓடையில் நீந்துகின்ற வென்ணிலா” என்கிற பாடல் தமிழ் திரையுலக மெலோடி பொக்கிஷங்களில் ஒன்றாக இணைந்தது. டைட்டில் கார்டில் பெயர் பார்க்காதவர்கள் இந்த படத்திற்கு இசை அமைத்தது இளையராஜா என்றே நினைத்திருப்பர். அந்த அளவிற்கு பாடல்கள் அனைத்தும் தேன்சிந்தும் ரகமாக இருந்தது. படத்தில் இளமை ததும்ப மிகவும் அழகாக முற்பகுதியில் வலம் வரும் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை துரத்தி துரத்தி காதலிப்பார். பின்னர் தனக்கு புற்று நோய் என தெரிந்ததும் அவரிடமிருந்து விலகி விலகிச் செல்வார். புற்று நோயாளியாக கமல் தனது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தை இந்த படத்தில் காட்டியிருந்தார். நடிகர் கே.பாலாஜி தயாரித்திருந்த இந்த படத்தில் ஜெய்சங்கர், மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது வாழ்வே மாயம்.
புன்னகை மன்னன்
கமல்ஹாசனை வைத்து பல காதல் காவியங்களை கொடுத்துள்ள பாலச்சந்தர் சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவருடன் இணைந்து கொடுத்த காதல் சரித்திரம்தான் புன்னகை மன்னம். இந்த படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தாலும் அவர்களுக்கு அந்நியமாக தோன்றாது. அந்த அளவிற்கு இளமை ததும்பும் நவீன காதல் காவியமாக புன்னகை மன்னனை 1986லேயே படைத்திருந்தார் கே.பாலச்சந்தர். காதல் தோல்விக்கு உயிரைமாய்த்துக்கொள்வது ஒரு தீர்வல்ல என்று இந்த படத்தில் சொல்லியிருப்பார் கே.பி. அவர் தனது 56வது வயதில் புன்னகை மன்னனை இயக்கியிருந்தார். அவருக்குள் இந்த வயதில் இப்படியொரு இளமை ததும்பும் சிந்தனையா என எண்ணும் அளவிற்கு புன்னகை மன்னன் மேக்கிங் இருக்கும். சந்த்ரு, சாப்ளின் செல்லப்பா என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்திருப்பார் கமல்ஹாசன். புன்னகை மன்னன் வெற்றிவிழாவில் ரஜினி பேசிய வார்த்தைகளே அதற்கு சாட்சி. சாப்ளின் செல்லப்பா கதாபாத்திரம் மூலம் தான் நடிகனுக்கெல்லாம் நடிகன் என கமல்ஹாசன் நிரூபித்துவிட்டதாக கூறிய ரஜினிகாந்த், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மட்டுமல்ல அதனை யூகிக்கவே இந்தியாவில் எந்த நடிகராலும் முடியாது என பாராட்டினார். புன்னகை மன்னன் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது இளையராஜாவின் இசை. படத்தின் பாடல்கள், பின்னணி இசையால் காதலர்களின் இதயங்களை வருடிக்கொடுத்தார் இளையராஜா. என்ன சத்தம் இந்த நேரம், ஏதோதோ எண்ணம் வளர்த்தேன் போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காதல் ரீங்காரங்களாக தமிழ் திரையுலக வரலாற்றில் பதிந்தன. கம்ப்யூட்டர் இசை தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானது புன்னகை மன்னனில்தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த ரேகாவும், ரேவதியும் சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். 1986ம் ஆண்டு நவம்பர் 1ந்தேதி தீபாவளி ரிலீசாக வெளிவந்த புன்னகை மன்னன் படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமே தயாரித்திருந்தது. புன்னகை மன்னன் வசூல் மன்னனாக மாறிவிட்டது என ரஜினியே புகழ்ந்தது போல் அந்த படம் கமல்ஹாசன் கொடுத்த வெள்ளி விழா ஹிட்களில் ஒன்றாக அமைந்தது.
அதிரடி ஆக்ஷன் நாயகனாக, ஸ்டைல் மன்னனாக, மாஸ் ஹீரோவாக தன்னை முன்னிறுத்திய படங்களிலேயே பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் அவரது சினிமா பட்டியலிலும் அரிதாக சில காதல்படங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானது புதுக்கவிதை. ரஜினி நடித்த காதல் படம் என்றாலே புதுக்கவிதைதான் நினைவுக்கு வரும். காதல் சோக பாடல்களின் பட்டியலில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ”வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே” புதுக்கவிதைப் படத்திற்காக இளையராஜா படைத்ததுதான். கவிதாலயா என்கிற பெயரில் கே.பாலச்சந்தர் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதும் ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரித்தார். கவிதாலயா தயாரிப்பில் முதல் படமாக நெற்றிக்கண் வெளிவந்தது. இரண்டாவதாக வெளிவந்த படம்தான் புதுக்கவிதை. சமூகத்தில் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகள் உண்மையான காதலை எப்படி சிதைக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கவிதையாக இந்த புதுக் கவிதை அமைந்திருந்தது. தனது ஆக்ஷன் அதிரடிகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மென்மையான காதல் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ரஜினி இந்த படத்தில் நடித்திருப்பார். குறிப்பாக வெள்ளைப்புறா ஒன்று பாடலில் ரஜினி வெளிப்படுத்தும் முக பாவங்களும், நீண்ட நாட்களுக்கு பின் தனது காதலியை சந்திக்கும்போது வெளிப்படுத்தும் முக பாவங்களும் அவருக்குள்ளிருக்கும் யதார்த்த நடிகனை வெளிப்படுத்தியது. தன்னால் ரொமாண்டிக் படங்களிலும் நடித்து வெற்றியை கொடுக்க முடியும் என ரஜினி புதுக்கவிதை மூலம் நிரூபித்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1982ம் ஆண்டு ஜூன் 11ந்தேதி வெளிவந்த புதுக்கவிதை பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
ஜானி
சினிமா இயக்கத்திற்கு புது இலக்கணம் வகுத்த இயக்குநர் மகேந்திரன், ரஜினியை வைத்து கோலிவுட்டில் இரண்டு மைல் கற்களை நாட்டியுள்ளார். முள்ளும் மலரும், ஜானி என்கிற அந்த இரண்டு திரைப்படங்கள் ரஜினிக்கு ஸ்டைல் காட்ட மட்டுமே தெரியும் நடிக்கத் தெரியாது என்கிற விமர்சனங்களை உடைத்தெரிந்தது. இதில் முள்ளும் மலரும் அண்ணன், தங்கை பாசத்தை வைத்து மகேந்திரன் கொடுத்த காவிய படைப்பாக அமைந்தது. ஜானி ரஜினியை வைத்து மகேந்திரன் கொடுத்த ரொமாண்டிக் படம். முற்றிலும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் ரஜினி இந்த படத்தில் வாழ்ந்துகாட்டியிருப்பார். குறிப்பாக ஜானி கதாபாத்திரம் ரஜினி தனது திரையுலக வாழ்க்கையில் ஏற்ற மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்தது. தமது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஸ்டைல், மகேந்திரன் படத்திற்கு தேவையான யதார்த்தம் என இரண்டையும் சம விகிதத்தில் ஜானி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த். திருடனாக வரும் ஜானியை பாடகியாக வரும் ஸ்ரீதேவி காதலிப்பது போன்ற மாறுபட்ட கதைக் களத்தில் காட்சிகள் நகரும். ரஜினியும், ஸ்ரீதேவியும் சந்திக்கும் காட்சிகளில் ஒரு மென்மையான காதல் ரசம் சொட்டிக்கொண்டேயிருக்கும். குறிப்பாக ரஜினியிடம் ஸ்ரீதேவி தனது காதலை புரபோஸ் செய்யும் காட்சிகள் தமிழ் சினிமா கண்ட கிளாசிக் காதல் காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. ”காற்றில் எந்தன் கீதம்….” ”ஆசைய காத்துல தூதுவிட்டு” போன்ற இளையராஜாவின் மெலோடி பாடல்கள் என்னென்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் காதல் மந்திரங்களாக அமைந்தன. வி.கோபிநாதன் தயாரிப்பில் 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று வெளியான ஜானி படம் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது.
-எஸ்.இலட்சுமணன்












