கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் முதல் உடல் அடக்கம் வரை, கடந்த 11 நாட்களாக நடந்த நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்…
கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 13 ஆம் தேதி அன்றே போராட்டத்தைத் தொடங்கினர். இதையடுத்து, 14 ஆம் தேதி மாணவியின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. அதிலும் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில், ஜூலை 17 ஆம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்பு நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இது தொடர்பான வழக்கில், மாணவி பிரேதப் பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரை இணைத்து மறு பரிசோதனை செய்ய வேண்டும் என ஜூலை 18 ஆம் தேதி பெற்றோர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர். உயர்நீதிமன்ற உத்தரப்படி ஜூலை 19 ஆம் தேதி சிறப்பு மருத்துவக் குழுவினர் அமைத்து மறு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இதில் பெற்றோர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் நாடிய நிலையில், உயர்நீதிமன்றத்தையே நாட ஜூலை 21 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் உடலைப் பெற்று இறுதிச் சடங்கு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலைப் பெற்றொர் பெற்று க்கொண்டனர். பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட மாணவியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாணவியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-ம.பவித்ரா