68-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது. இப்படம் பெற்ற விருதுகள் குறித்தும் படம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்…
இந்திய சினிமா துறையின் மதிப்புமிக்க விருதாக பார்க்கப்படும் தேசிய விருத்திற்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 68வது தேசிய விருது பட்டியலில், சூரரைப் போற்று திரைப்படம், விருதுகளை குவித்து தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு மகுடத்தை சேர்த்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளியுள்ளது சூரரைப் போற்று.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுத்த படம்தான் இது. ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை விமானத்தில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு வெற்றியின் வேட்கையுடன் நகரும் கதாபாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கும் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
பொதுவாக ஆணின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்களே பெண்கள் என்று இருக்கும் பிம்பத்தை அடித்து உடைத்து, பெண்ணிற்கும் கனவுகள் உண்டு, அதை அடைவதற்கு அவர்களுக்கு இருக்கும் தடைகள் என அனைத்தையும் தனது நடிப்பின் மூலம் அனாயசமாக கடத்திய அபர்ணா பாலமுரளியும் தேசிய விருது பெற்றுள்ளார். ஒரு காட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படும் பின்னணி இசையை, மிக கட்சிதமாக கையாண்ட விதத்திற்காகவே ஜிவி.பிரகாஷிற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஜிவியின் பங்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
ஹீரோயிசத்தை தூக்கி பிடிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகள் இருந்தும், அதை தவிர்த்து அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளித்து மொத்த படமாகவே சூரரைப் போற்று வென்றுள்ளது. மேலும், நிஜமாக கோபிநாத் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மாற்றி, படத்திற்கு ஏற்ற வகையில் மாற்றிய விதம் படத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டு சென்றது.
கொரோனா காலத்தில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாத சூழலில் ott-யில் வெளியான முதல் பெருகிய நட்சத்திரத்தின் படமாக இது அமைந்தது. தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவின் இந்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டது. திரையரங்க உரிமையாளர்களால் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார். இவ்வாறு பல தடைகளை கடந்து வெளியான படம், பல்வேறு சாதனைகளை படைத்தது. நாம ஜெயிச்சுட்டோம் மாறா என்ற வகையில் தேசிய விருதுகளையும் தற்போது குவித்துள்ளது. மேலும் சூர்யா மீது எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த தேசிய விருதே பதிலளித்துள்ளது என்றே கூறலாம்…
– சந்தோஷ்