ஓட்டல் பில் கட்டாததால், பிரபல நடிகரின் மகன் உட்பட படக்குழுவை நிர்வாகம் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ். இவர், தமிழில் ’மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பக்க கதை என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் காளிதாஸ், ஓடிடி தளங்களில் வெளியான, பாவக்கதைகள், புத்தம் புது காலை ஆகிய ஆந்தாலஜி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் அவர் மூணாறு சென்றுள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்நிலையில் அந்த படக்குழுவினர் ஓட்டல் அறை மற்றும் ரெஸ்டாரண்ட்டுக்கான தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களை ஓட்டல் நிர்வாகத்தினர் சிறை வைத்தனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதை அடுத்து படக்குழுவும் ஒட்டல் நிர்வாகமும் ஒரு முடிவுக்கு வந்தது. முதலில் ஒரு தொகையை கொடுப்பது என்றும் ஷூட்டிங் முடிந்த பிறகு மொத்த தொகையையும் படக்குழு கொடுக்கும் என்று போலீசார் உறுதியளித்ததை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.
பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறைபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.









