கலாஷேத்ரா விவகாரம்: உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறை

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான…

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  ஏராளமான மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புகார்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.

இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற தேசிய மகளிர் ஆணையம் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அமைப்பினர் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.

ருக்மணி தேவி கலை கல்லூரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 5ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நான்கு பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வு எழுத கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டார். கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு 13ம் தேதி வரை சிறையில் அடைக்க  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி சென்னையில் உள்ள  தலைமைச் செயலகத்தில்  சமர்ப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.