விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருத்தங்கல்லில் சட்ட விரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட திருப்பதி, முத்துக்குமார், கணேசன், ஞானசேகரன், நாகார்ஜுன், ராஜசேகர், அந்தோணி ராஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பட்டாசு மூலப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் வெடி விபத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் 40 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.




