சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 1400 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
16வது ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று 6வது லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், மஞ்சள் நிற ஜெர்சியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். கிட்டத்தட்ட 1400 நாட்களுக்கும் மேலாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறாத சூழலில், இன்று சென்னையில் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வருகை புரிந்துள்ளனர். 
ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்
மகேந்திர சிங் தோனியை பார்க்க சைக்கிளில் மஞ்சள் பெயிண்ட் அடித்து, தோனிக்கு ஆதரவாக சேத்துப்பட்டு பகுதியில் இருந்து லாரன்ஸ் என்பவர் வருகை புரிந்துள்ளார்.
பாதுகாப்பு பணிகளுக்கான 1300 மேற்பட்ட காவல்துறையினர் குவிந்துள்ளனர். அதுமட்டுமின்றி ரசிகர்களின் வசதிக்காக கூடுதல் போக்குவரத்து, இலவச மெட்ரோ ரயில் பயணம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.







