கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்

அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கபட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது மந்தநிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது. கோடிக்கணக்கில் வசூல் ஆனத்தொகை என்னவானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே…

அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கபட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது மந்தநிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது. கோடிக்கணக்கில் வசூல் ஆனத்தொகை என்னவானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற ஒரு சிறு கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கிய முன்னாள் முதல்வர்  கலைஞர் கருணாநிதிக்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழகத்திலேயே முதன் முதலாக கலைஞர் அறிவு திருக்கோயில் என்ற பெயரில் ஒரு கோயிலை கட்டுவது என முடிவெடுத்தனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த அறிவு திருக்கோயிலில் நூலகம், கலைஞரின் வரலாறு உட்பட அனைத்து அம்சங்களும் அமையும் என்றும், இந்தக் கோயில் முழுக்க அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு கட்டப்படும் என்றும் கூறப்பட்டது.

இதற்கு தேவையான பத்தாயிரம் சதுர அடி நிலத்தை பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி என்பவர் இலவசமாக வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முதல் முதலாக கலைஞருக்கு கோயில் கட்டுவதை வரவேற்கும் விதமாக திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் என நேரடியாக குச்சிக்காடு கிராமத்திற்கு வந்து நிதி உதவியை வழங்கியதுடன் சிறப்பாக கட்டி முடிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.

கலைஞர் திருக்கோயில் குறித்து தலைமைக்கு தகவல் கிடைக்கவும், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக அவ்விடத்திற்கு சென்றார். பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதியன்று கலைஞரின் சிலை அமையவுள்ள பீடத்தில் செங்கலை வைத்து பூஜைகள் செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினே நேரில் வந்ததால், இந்த பிரம்மாண்ட கலைஞர் திருக்கோயிலுக்கு நன்கொடைகள் குவியத்தொடங்கின.  சுமார்30 லட்சம் ரூபாய் மதிப்பீடு போடப்பட்ட இந்த கலைஞர் திருக்கோவிலுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது. இவ்வளவு வசூலான தொகையை ஒரு சிலரிடம் கொடுத்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் அந்த பணத்தை கோயில் திருப்பணிகளுக்கு செலவிட தற்போது மறுப்பதாக தெரிகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது இதனால் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி போயுள்ளது.

இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என அருந்ததியர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.