ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்

அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில்…

அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதல் கலவரமானது. அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அவ்வை சண்முகம் சாலை முழுவதுமே போர்க்களமாக காட்சியளித்தது. ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் , கட்டைகளால் தாக்கியும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் அதிமுக அலுவலகமும் சிக்கி சுக்கு நூறானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடைபெற்றன. ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி இரு தரப்பும் நீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சாவியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு சாவியும் அலுவலக மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்து நாட்களுக்கு பிறகு அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது. நிர்வாகிகளால் நிரம்பி வழியும் அதிமுக அலுவலகம் வழக்கத்திற்கு மாறாக அலங்கோலமாக காட்சியளித்தது. ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், உள்ளிட்ட மூன்று மாடிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் அறைகளின் கதவுகள் கடப்பாறை மூலமாக தகர்க்கப்பட்டிருந்தன. அலுவலகத்தில் இருந்த புகைப்படங்கள், மேஜை, நாற்காலிகள், கணினிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் அனைத்தும் கிழித்து வீசப்பட்டுள்ளன. அலுவலகம் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஆதரவாளர்கள் JCD பிரபாகர் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஆதி ராஜாராம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருடிச் சென்ற பொருட்கள், ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.