வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதி இல்லை – மத்திய அரசு

உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயின்ற மருத்துவக் கல்வி மாணவர்களை இந்தியாவில் கல்வியைத் தொடர தேசிய மருத்துவக் கல்லூரி ஆணையத்தில் அனுமதி இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில…

உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயின்ற மருத்துவக் கல்வி மாணவர்களை இந்தியாவில் கல்வியைத் தொடர தேசிய மருத்துவக் கல்லூரி ஆணையத்தில் அனுமதி இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில உறுப்பினர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு மேற்குவங்க மாநில மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது உண்மையா? எனவும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறை தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாட்டின் மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பான “தேசிய மருத்துவக் கல்வி ஆணையம்” அளித்த தகவலின்படி மேற்குவங்க மாநிலத்தில் உக்ரைனியில் இருந்து திரும்பிய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான எந்த தகவலும் இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர விதிகள் ஏதும் இல்லை.

அதேபோல, 2019 விதியின்படி வெளிநாட்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யவோ அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிப்பைத் தொடரவோ இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு மருத்துவக் கல்வி நிலையங்களிலும், கல்லூரிகளிலும் வெளிநாட்டு மாணவர்களை இடமாற்றம் செய்யவும் அல்லது உள்நாட்டில் படிக்க வைக்கவோ தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.