அதிருப்தி தலைவர்கள் அடுத்தடுத்த விலகி வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தின் அடுத்த ஆட்சி, அரியணை யாருக்கு ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கருத்துக் கணிப்புகளும் கள நிலவரமும் என்ன சொல்கின்றன. பார்க்கலாம்…
கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி என்றாலும், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் மொத்த 224 இடங்கள் உள்ளன. இதில், 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும்.
2018ல் தனிப்பெரும்பான்மை இல்லை
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104, காங்கிரஸ் 80, மதச் சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஓரு வாரத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சரானார். ஓராண்டில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சரனார். பின்னர், உட்கட்சி முடிவால், 2021ம் ஆண்டு பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான நிலை
இந்த பின்னணியிலதான், தற்போது சட்டபேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான காற்று வீசுவதாக சொல்லப்படுகிறது. கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சிலர், மதச்சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சியை தீர்மானிப்பதில், முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆளும் பாஜகவில் அதிருப்தி குரல்கள் அதிகம் கேட்கின்றன.
வளர்த்தவர்களை கைவிட்ட கட்சி
குறிப்பாக, 50க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு, 10க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள், தலைவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு என பாஜக அதிரடி காட்டியுள்ளது. க்இதனால், அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரபா முன்பே ஒதுங்கி விட, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சவடி, எடியூரப்பாவிற்கு நெருக்கமாக இருந்த சந்தோஷ் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கும் ஆட்சிக்கும் இவர்களின் பங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கவனம் ஈர்த்த வாக்குறுதிகள்
மேலும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா என்கிற கே.பி.பி.ஆர்’ கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவதும் பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் உட்கட்சி பிரச்சினை, அதிருப்தி ஒருபுறமிருக்க, 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பெரிதும் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளன என்கிறார்கள்.
இத்துடன், அகில இந்திய தலைவராக உள்ள கர்நாடகத்தின் மல்லிகார்ச்சுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் பிரச்சாரம் காங்கிரஸ் கையை மேலும் வலுவாக்கும், ஆகையால் தற்போதைய நிலையில், காங்கிரஸ் கை ஓங்கியுள்ளது. இதைத் தான் கருத்து கணிப்புகளும் காட்டுகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
குஜராத் போல் கர்நாடகா-விலும் – பாஜக
ஆனால், இதை மறுக்கும் பாஜக-வினர் ‘கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவது இயல்பானதுதான். இது தேர்தல் வெற்றியைப் பாதிக்காது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோரின் பிரச்சாரம், வியூகம் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும். குஜராத் போல கர்நாடகத்திலும் தங்களுக்கு சாதகமான முடிவு வரும்’ என்கிறார்கள் பாஜகவினர். கட்சியில் இருந்து விலகியுள்ள ஜெகதீஷ் ஷெட்ட முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எடியூரப்பா 150 இடங்களுக்கு மேல் வென்று, ஆட்சி அமைப்போம் என்கிறார்.
வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைப்போம் ’ என்கிறார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.
பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கர்நாடகத்தில் இருந்து புதுக் கணக்கைத் தொடங்குமா காங்கிரஸ்…? மோடி, அமித் ஷாவின் வியூகம் மீண்டும் வெல்லுமா? மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும்…?
மே 13ம் தேதி வரை காத்திருப்போம்….
இதன் வீடியோ செய்தி : https://youtu.be/PBhjs7T8bTc







