பெர்லினை சேர்ந்த கலைஞரான போரிஸ் எல்டாக்சென், ஒரு உயர்மட்ட புகைப்படப் போட்டிக்கு சமர்ப்பித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் பரிசை வென்ற எல்டாக்சென், தனது வெற்றிகரமான குறும்புத்தனத்திலிருந்து பரிசாக கிடைத்த பணம் மற்றும் பிற பலன்களை ஏற்கமாட்டேன் என்று கூறியதோடு, இவரின் இந்த செயல் AI-உருவாக்கப்பட்ட படங்களின் வருகையை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய கேள்விகளைக் கலை உலகில் எழுப்பும் நோக்கத்தில் செய்ததாகக் கூறியுள்ளார்.
எல்டாக்சென் உலக புகைப்பட அமைப்பின் சோனி உலக புகைப்பட விருதுகளில் படைப்பு பிரிவில் முதல் இடத்தை வென்றார். இதில் $5,000 மற்றும் இலவச சோனி கேமரா உபகரணங்கள் அடங்கும். ஆனால் அந்த விருதை ஏற்கப்போவதில்லை என்று அவர் தனது இணையதளத்தில் ஒருகடிதத்தில் எழுதியுள்ளார்.
அதில் அவர் “எனது படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கும், இதை ஒரு வரலாற்றுத் தருணமாக மாற்றியதற்கும் நன்றி. இது ஒரு மதிப்புமிக்க சர்வதேச புகைப்படப் போட்டியில் வென்ற முதல் AI உருவாக்கிய படம்,” உங்களில் எத்தனை பேருக்கு இது AI உருவாக்கப்பட்டது என்று தெரியும் அல்லது சந்தேகம் உள்ளது? AI படங்கள், உண்மையான புகைப்படங்களுடன் விருதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடக் கூடாது. எனவே நான் விருதை ஏற்க மாட்டேன்,” என்று எல்டாக்சென் தனது இணையதளத்தில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எல்டாக்செனின் புகைப்படம், போட்டியின் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எல்டாக்சனின் இந்த செயல் குறித்து உலக புகைப்பட அமைப்பு எந்த விளக்கமும் அளிக்க வில்லை.







