முதல் இந்திய பெண் மருத்துவரான கடம்பினி கங்குலியின் 160வது பிறந்தநாளை ஒட்டி, டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது கூகுள்!
பிரிட்டீஷ் இந்தியாவில் பீகார் மாநிலம் பகல்பூரில், 1861 ஆம் ஆண்டு பிறந்த கடம்பினியின் சொந்த ஊர், பங்களாதேஷில் உள்ள பாரிசல். பகல்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அவரது தந்தை பிரஜ கிஷோர் பாபுதான், கடம்பினியின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளார்.
சீர்திருத்தவாதியான பிரஜ கிஷோர், அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து, “பகல்பூர் மகிள சமிதி” என்ற பெண்கள் அமைப்பை நிறுவியவர். பிரிட்டீஷ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் இயக்கம் இதுதான்.
அன்றைய காலத்தில் பெண்கள் கல்வி கற்பதை அனுமதிக்காத சமூகத்தில் பிறந்தாலும், அவர் தந்தை கல்வி கற்பதை ஊக்கப்படுத்தினார். பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கடம்பினி, 1878 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவு தேர்வை எழுதினார். அதில் வெற்றிபெற்ற முதல் பெண்ணும் கடம்பினிதான் என்பது குறிப்பிடத் தக்கது.
கடம்பினியின் முயற்சியைப் பாராட்டும் விதமாக பெத்தூன் கல்லூரியில், 1879-ஆம் ஆண்டு முதல் இடைநிலைப் படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டன. இதில் படித்து முதன்முதலாக பட்டம் வென்றவர்கள் 2 பெண்கள். ஒருவர் கடம்பினி கங்குலி மற்றொருவர் சந்திரமுகி பாஸு. இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் இவர்கள்.
படித்து முடித்ததுமே பேராசிரியரும் பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவருமான துவாரகாநாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் கடம்பினி கங்குலி. திருமணத்திற்கு பின் மருத்துவம் படிக்க விரும்பினார் கடம்பினி. அவருக்கு கணவரும் ஆதரவு தெரிவித்தார்.
’மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ இளநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவிகளை அனுமதித்த காலகட்டத்தில், கொல்கத்தா மருத்துவ கல்லூரி, பெண்களை அனுமதிக்கவில்லை. இதை மாற்ற முயற்சித்த கடம்பினியின் முயற்சிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தாண்டி 1886-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து வெற்றிகரமாக முடித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் கடம்பினி.
பின்னர் ஐரோப்பா சென்று மருத்துவ மேற்படிப்புகளை முடித்தார். இந்தியா திரும்பிய அவர் பெண்களை கல்வியில் மேம்படுத்த முயன்றார். அதற்காக தொடர்ந்து பாடுபட்டார். 1889-ஆம் ஆண்டு நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத் தொடரில் பங்கேற்ற பிரதிநிதிகளில் கடம்பினி கங்குலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.









