சென்னை உயர்நீதிமன்றத்தின் 54 வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவின் இன்றுடன் (மார்ச் 5) ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியே ஸ்ரீவஸ்தவாவின் ஓய்விற்கு பின் தலைமை நீதிபதி பதவியில் எஸ்.ஏ. தர்மாதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடதகுந்தது.
யார் இந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி…?
நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த இவர், 1992-ஆம் ஆண்டு வழக்கறிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். இவர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கிய வழக்குகளைக் கையாண்ட அனுபவம் கொண்டவர்.
2016-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2025-ல் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். நீதித்துறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக ஆளுநர் முன்னிலையில் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.







