கம்பரசம் கண்ட நீதியரசர் மு.மு.இஸ்மாயில்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பலர், தமிழைத் தங்கள் ஆய்வு மற்றும் கவித்திறத்தால் செம்மைப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரிசையில், தனது வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தை ஆழ்ந்து அறிந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்,1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.…

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பலர், தமிழைத் தங்கள் ஆய்வு மற்றும் கவித்திறத்தால் செம்மைப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரிசையில், தனது வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தை ஆழ்ந்து அறிந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்,1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.

ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த இஸ்மாயில், நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை என அடிக்கடி சொல்வாராம். “அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்’ என்ற நூலை எழுதிய அவரது பள்ளிக்காலம் நாகூரில்தான் கழிந்தது. புத்திசாலியாக இருந்ததால் மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு தேறியவர் இஸ்மாயில்.

திரைப்பட பின்னணி பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தை ஆராவமுது ஐயங்கார் என்ற தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் பயின்ற இஸ்மாயில் இளமையிலேயே தமிழறிவைப்பெற்றார். சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார். காந்தியவாதியான பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்பவர் மகாத்மா காந்தியின் நூல்களைத் தொகுத்தவர்.

பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றியதால் இளம் வயதிலிருந்தே காந்தியின் “ஹரிஜன்’ இதழ்களை சேகரித்து வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார். தமிழ் மீதான ஆர்வத்துடன் இருந்த அவருக்கு கம்பரும், கம்பராமாயணமும். மிகவும் பிடித்து போனது.

இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் ஆர்வலர்கள், இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி நேயர் விருப்பம் போல் கேட்க ஆசைப்பட்டார்கள். மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றி அவர் எழுதிய முதல் புத்தகத்திற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.

கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி என அடுத்தடுத்து பழந்தமிழ் ஆய்வு நூல்களை எழுதினார் இஸ்மாயில். வாலிவதை பற்றிய இவரது “மூன்று வினாக்கள்’ என்ற நூலுக்காக பொன்னாடை அணிவித்து, பாராட்டினார் காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பட்டங்களை பெற்ற இஸ்மாயில், கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர். கம்பராமாயண மூல நூலை, முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்தார் இஸ்மாயில்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரிய இஸ்மாயில், 1980ம் ஆண்டில் ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.

2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.