19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளனர்.
14 வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. அதில் ஆன்டிகுவாவில் நேற்று அரங்கேறிய கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. டாஸ்ஸில் இங்கிலாந்து அணி ஜெயித்தது. இதனால் இங்கிலாந்து அணி கேப்டன் டாம் பிரிஸ்ட் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கினார்.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ரீவ் 95 ரன்கள் எடுத்தார்.
பின் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடி 47.4 ஓவர்களில் 195 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜூனியர் உலக கோப்பைகளில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அதிக முறை ஜூனியர் உலககோப்பையை வென்ற அணி எனும் சாதனை படைத்துள்ளது.








