“ஜூலை 14” பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் – பிரதமர் மோடி

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் நிலையில், இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில், ஜூலை 14 ஆம் தேதியான இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்…

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் நிலையில், இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில், ஜூலை 14 ஆம் தேதியான இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான் விண்கலம் இன்று பகல் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு அனைத்து பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பகல் 2.35 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த புதிய முயற்சியை பாராட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது;

நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சந்திரயான்-1, நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியதால், உலகளாவிய நிலவுப் பயணங்களில் ஒரு வழித்தடமாக கருதப்படுகிறது. இது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அறிவியல் வெளியீடுகளில் இடம்பெற்றது.

அதேபோல் சந்திரயான்-2 சமமான பாதையை உடைத்துவிட்டது. ஏனெனில் அதனுடன் தொடர்புடைய ஆர்பிட்டரின் தரவு ரிமோட் சென்சிங் மூலம் முதல் முறையாக சந்திரனில் குரோமியம், மாங்கனீசு மற்றும் சோடியம் இருப்பதைக் கண்டறிந்தது. இது சந்திரனின் மாக்மாடிக் பரிணாமத்தைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை வழங்கும்.

தற்போது சந்திரயான்-3 பணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த பணியில் விண்வெளி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் செய்த முன்னேற்றங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்தும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரையில் 2023, ஜூலை 14 ஆம் தேதியான இந்த நாள் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3, நமது மூன்றாவது சந்திரப் பயணம். அது தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த புதிய முயற்சியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி வரலாற்றில் ஒரு அசாதாரண சாதனையை அடைய நெருங்கி நிற்கிறோம். சந்திரயான் 3 இன் வெற்றி விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் போக்கை நிச்சயம் மாற்றும் என அவர் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.