பாட்னா விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பீகாரில் உற்சாக வரவேற்பு!

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் மாநில தலைநகர் பாட்னாவிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள,…

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் மாநில தலைநகர் பாட்னாவிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் நாளை நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, சரத்பவார், அர்விந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் பாட்னா புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கருணாநிதியின் பிரதிநிதியாக தாம் பங்கேற்க உள்ளதாக கூறியிருந்தார். ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனு விமானம் மூலம் பாட்னா சென்றடைந்த அவருக்கு பீகார் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நான் பாட்னா வந்தடைந்தேன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அன்பாக வரவேற்றனர். மேலும் பீகார் தமிழ் சங்கத்தினர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காட்டிய அன்புக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

அதோடு இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.