திமுகவில் இணையப்போவதாக வெளியான தகவல் தொடர்பாக வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை சந்தித்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைகின்றனர். கோவை பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைகிறார். திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்ற போவதாக அவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக தகவலும் அளித்திருந்தார்.
இதுபோலவே முதலமைச்சரை சந்தித்து வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி திமுகவில் இணைவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், உடனடியாக இதனை மறுத்துள்ளார் அமுல் கந்தசாமி.
இதுதொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “1979 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து சிறுவயது முதல் கட்சிப் பணியாற்றி வருகிறேன். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரை வரவேற்க தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்தேன். ஆனால், நான் திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
திமுகவில் இணைவது குறித்தான தகவல் முற்றிலும் தவறானது என விளக்கம் அளித்த அவர், “எனக்கு அதிமுகவில் இருக்கக்கூடிய பெயரை கலங்கப்படுத்தும் விதமாகவும் வதந்தி பரப்புகிறார்கள். வேலுமணி தலைமையில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். என்னுடைய சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். பிறப்பும், வளப்பும், இறப்பும் அதிமுகவில்தான்” என்று விளக்கம் அளித்தார்.







