நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் எனவும், வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அதுகுறித்து தெரிவித்த அமைச்சர் கணேசன், தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலமாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும், வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றன. பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்காக விழிப்புணர்வு வாகனங்களும் பயன்படுத்தப்படும் என்றார்.
-ம.பவித்ரா








