அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபைடன் பதவியேற்றுக் கொண்ட விழா வாஷிங்டனில் கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி வெற்றி…

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபைடன் பதவியேற்றுக் கொண்ட விழா வாஷிங்டனில் கோலாகலமாக நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் விழா வாஷிங்டனில் களைகட்டியது. வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் ஹில்லில் நேற்று (20-01-2021) நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதலில் துணை அதிபர் கமலாஹாரிஸ் பதவி ஏற்றார். அவருக்கு சோனியா சோட்டோ மேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். வாஷிங்டன்னில் உள்ள செயிண்ட் மேத்யூ தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த பின் விழாவிற்கு வந்த பைடனுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோபைடன் முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்ற வரலாறு அமெரிக்காவிற்கு உண்டு எனவும் அனைத்து அமெரிக்க மக்களுக்குமான அதிபராக இருப்பேன் என்றும் ஜோபைடன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஜோபைடன், கமலாஹாரில் குடும்பத்தினர் இந்தப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். அதே சமயம் ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புறக்கணித்தார். முன்னதாக அவர் அமெரிக்க நேரப்படி புதன் கிழமை காலை வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புளோரிடாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கிளம்பினார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் விடைபெற்ற ட்ரம்ப், புதிதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகம் வெற்றி பெறுவதற்கு இறவனை வேண்டிக்கொள்வதாக கூறினார். மேலும் அமெரிக்காவை பாதுகாப்பாகவும், வளத்துடன் வைத்துக் கொள்வதற்கும் வாழ்த்துவதாக தெரிவித்தார். எதை செய்வதற்காக அமெரிக்க அதிபராக பதவிக்கு வந்தேனோ அதைச் செய்து விட்டதாகவும் ட்ரம்ப் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply