முக்கியச் செய்திகள் உலகம்

வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

“அனைத்து விதமான தடைகளையும் உடைத்தெறிந்த ஒரு தாய்க்கு பிறந்த மகள் தான் நான். ஷியாமளா ஹாரிஸ் 5 அடி உயரம் கூட இருக்கமாட்டார், ஆனால் அவரைச் சந்தித்தால் அவர் 7 அடி உயரமானவர் என நீங்கள் நினைப்பீர்கள். அத்தகைய தகுதியும், உத்வேகமும் கொண்டவர். அவரால் வளர்க்கப்பட்டதற்கு நான் தினமும் நன்றி கூறுகிறேன்.” அன்னையர் தினத்தில், தனது தாயாரின் படத்தைப் பதிவிட்டு, கமலா ஹாரிஸ் எழுதிய இன்ஸ்டாகிராம் பதிவு தான் இது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர். ஷியாமளாவின் தந்தை கோபாலன், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். இவர்கள் சென்னை பெசண்ட் நகரில் வசித்து வந்தனர். 19வது வயதில் உயர் படிப்பிற்காக ஷியாமளா அமெரிக்காவுக்கு சென்றார். தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்த ஷியாமளா, அமெரிக்காவில் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஜே ஹாரிஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் தான் கமலா தேவி ஹாரிஸ். கமலா, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆக்லேன்ட்டில் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். அவரது சகோதரி மாயா ஹாரிஸ். கமலா 7 வயதாக இருக்கும் போது, ஷியாமளா, அவரது கணவரான டொனால்ட் ஜே ஹாரிஸை பிரிந்தார். பின்னர் தனியாகவே இருந்து, அவரது மகள்களை வளர்த்தெடுத்தார் ஷியாமளா.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரி என அமெரிக்கா மற்றும் கனடாவில் தனது படிப்பை முடித்தார் கமலா ஹாரிஸ். 2003ம் ஆண்டு முதல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞரானார். அப்போது தான், டக்லஸ் எம்ஹோப் என்ற சக வழக்கறிஞரைச் சந்தித்தார் கமலா ஹாரிஸ். முதல் சந்திப்பே காதலாக மாற இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். கணவரின் 2 குழந்தைகளை பாசத்தோடு வளர்த்து வரும் கமலா, அவர்கள் மொமலா என தம்மை அழைப்பதைச் சொல்லி பூரித்து போகும் ஒரு குடும்பத் தலைவி.

ஒரு நேர்காணலில், சித்தி என்ற தமிழ் வார்த்தையை கமலா ஹாரிஸ் உச்சரித்தது பெரிதும் பேசப்பட்டது. இதன் மூலம், தனது வேர்களை ஒருபோதும் மறக்காமல், விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார் கமலா தேவி ஹாரிஸ் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பது மட்டும் அல்ல, அதற்கு முன்பே ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்ணாக, இந்திய-அமெரிக்க பெண்ணாக இதுவரை யாரும் வகித்திடாத பதவிகளையும் கமலா விகித்துள்ளார். 2017ம் ஆண்டு அமெரிக்க செனட் சபை உறுப்பினரானார். அவர் அந்த பதவிக்கு போட்டியிட்ட போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஆதரவு கொடுத்தனர். அமெரிக்க வரலாற்றில் செனட் சபைக்கு, தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்காசிய அமெரிக்க பெண் என்ற பெருமை அப்போது கமலாவிடம் வந்து சேர்ந்தது.

நீண்ட நெடிய போராட்டம் மற்றும் பொதுவாழ்வின் பயணாக இப்போது அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கிறார் கமலா தேவி ஹாரிஸ்.
கொரோனாவுக்கு தினசரி 3000 பேர் பலியாகும் சூழலில், ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் முன்பு சவால்கள் காத்திருக்கின்றன. உலகின் சக்திவாய்ந்த பெண்களுள் ஒருவராக உருவெடுத்துள்ள கமலா ஹாரிஸ், இனி எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் சுலபமானதாக இருக்காது என்றும் மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடன், எதிர்கொள்வோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களிடம் மீண்டும் நம்பிக்கை ஒளி பாய்ச்சி, கொரோனாவை வென்று காட்டுவதன் மூலம் வெள்ளை மாளிகையில் துணை அதிபராக அமர்ந்துள்ள தமிழ் மகளான கமலா ஹாரிஸ் அதிபர் பதவியை நோக்கியும் அடியெடுத்து வைத்து, எதிர்காலத்தில் புதிய வரலாறையும் படைக்க முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கழிவுநீரை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம்: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு

Vandhana

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

Jeba Arul Robinson

Leave a Reply