புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ கல்லூரி மாணவியிடம், மது போதையில் இருந்த காவலரும் அவரது நண்பரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரும் பங்கெடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவி நிகழ்ச்சிக்கு இடையில் ஜிப்மர் வாகன நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, அந்த மாணவியின் உறவினரில் ஒருவர் ஐதராபாத்தில் காவல்துறை உயரதிகாரியாகவும், மற்றொருவர் மாவட்ட ஆட்சியராகவும் உள்ளனர். 
நடைபெற்ற இந்த சம்பவத்தை அறிந்த அவர்கள் உடனே குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க டிஜிபி தன்வந்திரி போலீசாருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து தன்வந்திரி நகர் காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அதே காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றும் தேத்தம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன், அவரது உறவினர் சிவா ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கண்ணன் மீது துறை ரீதியாக காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே சம்பவத்தன்று காவலர் கண்ணனுக்கு விடுமுறையாகும், ஆனால் அவர் தனது உறவினர் சிவாவுடன் மது அருந்திவிட்டு, ஜிப்மரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் தனது அடையாள அட்டையை காண்பித்து கலந்துகொண்டுள்ளார். பின்னர் மதுபோதையில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த ஒருவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.







