கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முதலமைச்சர் பதவிக்கு தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற பெண் போட்டியிடுகிறார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி (NDP) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாகாணத்தின் முதலமைச்சராக ஜான் ஹோர்கன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவி மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதையடுத்து உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டத்துறை அமைச்சராக உள்ள டேவிட் எபி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அஞ்சலி அப்பாதுரை களமிறக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதி உட்கட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி, டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. புதிய தலைவராக தேர்வு செய்யப்படுபவரே பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சராக பதவியேற்பார் என்றும்,அவரே வரும் 2024-ம் ஆண்டு அங்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை, தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 1990ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி மதுரையில் பிறந்த அஞ்சலி, சிறுவயதில் தமிழ்நாட்டில் தான் வசித்து வந்துள்ளார். பின்னர், அஞ்சலியின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அவருக்கு 6 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் கனடாவில் குடியேறி உள்ளனர். அங்குள்ள கோகுவிட்லம் (( Coquitlam )) நகரில் அவரது குடும்பம் வசித்து வருகிறது. அரசியல் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் அறியப்படும் அஞ்சலி அப்பாதுரை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதலமைச்சராக பதவியேற்கும் பட்சத்தில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் வரிசையில், தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா








