2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக திமுக எம்.பி. ஆ.ராசா நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியாவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் 5% வரியாக பிராண்டட் பொருள்களுக்கு மட்டும் ஏக மனதாக கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் அனைவரும் அமர்ந்து பேசி எடுக்க கூடிய முடிவு இது. 2017- 2022 வரை 14% வரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் revenue வரவில்லை என்றால் அதற்கான மானியத்தை வழங்கும்.
கொரானா காலத்தில் மாநில நிதி அமைச்சர் தான் செய்த தவறு ஒப்புக்கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆடத் தெரியாதவன் மேடையை கோணல் என்று சொன்னது போல அவரது அறிக்கை உள்ளது. மத்திய அரசு மேல் பழி போடுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசை குறை கூறுகிறார்கள். மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதன் படி பார்த்தால் ஏமாற்று வேலை தான்.
சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளது. கனிமொழி எம்.பி முதல்வருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்ற சொல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் அளவுக்கு எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு கொடுக்கவில்லை. 9 கோடி பேர் பயன்படுத்தும் உஜ்வாலா சிலிண்டர் விலை குறைப்பின் மூலம் மக்கள் பயனடைந்து உள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 41% அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 5 ஜி ஏலத்தில் நம் நாட்டுக்கு 1 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி கிடைத்துள்ளது. இதுவரை நடந்த ஏலங்களில் இதுதான் அதிகம். ஆப்பிள், ஆரஞ்ச இரண்டையும் ஒப்பிடுவது போல் உள்ளது. முன்பு லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் இணைந்து நடந்தது. 3 முறை விற்கப்படாமல் இருந்த 700 mhz விற்கப்பட்டுள்ளது. முழுமையாக விற்கப்படவில்லை. 2 ஜி ஊழலை இன்னும் மக்கள் மறக்கவில்லை. விலை முடிவு செய்வது எப்படி என்று 2013 இல் உச்ச நீதிமன்றம் கமிட்டி அமைத்து முடிவு செய்யப்பட்டது என்றார் அண்ணாமலை.








