இந்தியாவில் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை எண்ணுக்கு அழைப்புகள் வந்தன. அந்த அழைப்புகளைக் கண்டறிய மும்பை காவல்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரிலையன்ஸ் அமைப்பின் ஹர்ஸ்கிசான்தாஸ் மருத்துவமனை மும்பையில் செயல்பட்டு வருகிறது.
டி.பி.மார்க் போலீசார் கூடுதல் தகவல்களை பெற முயன்று வருகின்றனர். இதுகுறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை புகார் அளித்துள்ளது.
மருத்துவமனைக்கு 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை இல்லமான ‘ஆண்டிலியா’வுக்கு வெளியே 20 வெடிகுண்டு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதத்துடன் ஸ்கார்பியோ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சச்சின் வாஸ் தலைமையிலான மும்பையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல போலீஸார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக சச்சின் வாஸ் பொறுப்பேற்றார்.
சில நாட்களுக்குப் பிறகு, தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரேனின் மர்மமான மரணத்திற்குப் பிறகு இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. அம்பானியின் வீட்டிற்கு வெளியே கிடைத்த ஸ்கார்பியோவின் உரிமையாளர் ஹிரேன். ஒரு வாரத்திற்கு முன்பு வாகனம் திருடப்பட்டதாக அவர் முன்பு கூறியிருந்தார். அவரது உடல் மார்ச் 5, 2021 அன்று தானேயில் உள்ள ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.