ரிசார்ட்டுக்கு பதில் அணை…பேருந்தில் ஏறாத 6 எம்.எல்.ஏக்கள்…ஜார்க்கண்டில் அடுத்தது என்ன?

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் அதிரடி ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்களை ஜார்க்கண்டில் உள்ள முக்கியமான லாட்ராடு அணைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அம்மாநில…

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் அதிரடி ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்களை ஜார்க்கண்டில் உள்ள முக்கியமான லாட்ராடு அணைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன். 6 எம்.எல்.ஏக்கள் அவருடன் செல்லாததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த 2000 ஆண்டு நவம்பர் 15ந்தேதி பீகாரிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவானது ஜார்க்கண்ட், கடந்த 22 ஆண்டுகளில் பல அரசியல் குழப்பங்களை எதிர்கொண்டுள்ள ஜார்க்கண்ட், 6 முதலமைச்சர்களை கண்டுள்ளது. அவர்களில் பாஜகவைச் சேர்ந்த ரகுபர்தாஸ் மட்டுமே தனது முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். இதுவரை மூன்று முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்படும் அளவிற்கு அங்கு அதிரடி அரசியல் திருப்பங்கள் வாடிக்கையாகியுள்ளன. சுயேட்சை எம்.எல்.ஏ முதலமைச்சர் ஆன அதிசயமும் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏவான மதுகோடா, சினிமாவில் வருவது போன்று நிகழ்ந்த அதிரடி திருப்பங்களால் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை சுமார் 2 ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இப்படி அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத ஜார்க்கண்டில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின்  முதலமைச்சராக இருந்துகொண்டு சுரங்க உரிமத்தை தனது பெயரில் ஒதுக்கியதற்காக ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய  வேண்டும் என பாஜக எம்.எல்.ஏக்கள் ஜார்க்கண்ட்  ஆளுநர் ரமேஷ் பாய்சிடம் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவை தலைமை தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெறுவதற்காக ஆளுநர் அனுப்பியிருந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து ஹேமந்த் சோரன் எந்தநேரமும் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தான் முதலமைச்சராக நீடிக்க முடியாமல் போனால் தனது மனைவி கல்பனா சோரனை அந்த பதவியில் அமர்த்தலாம் என ஹேமந்த் சோரன் திட்டமிடுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரம் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி பாஜக ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயலலாம் என்கிற கலக்கமும் ஹேமந்த் சோரனிடம் இருப்பதாக ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 81 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசுக்கு 49 எல்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எல்.ஏ.ஏக்கள் 30 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 18பேர், ராஷ்ட்ரியஜனதா தள எம்.எல்.ஏ ஒருவர் என 49 பேரின் ஆதரவு ஹேமந்த் சோரன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இருக்கிறது. எனினும்  மகாராஷ்டிராவில் சிவசேனாவின் எம்.எல்.ஏக்கள் 55 பேரில் 40க்கும் மேற்பட்டோர் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறி பாஜக வசம் ஆட்சி சென்றதை ஐர்க்கண்ட் முக்தி மோர்ச்சா நினைத்து பார்க்காமல் இருக்கமுடியாது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன்,  எம்.எல்.ஏக்கள் அணி மாறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று ராஞ்சியில்  தமது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை மூன்று முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் ஹேமந்த் சோரன். வெளியூர் சென்றால் தங்குவதற்கு வசதியாக பேக்குடன் கூட்டத்திற்கு வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு கூறப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு கிளம்பி வந்தனர் எம்.எல்.ஏக்கள். பின்னர் அவர்கள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் மூன்று பேருந்துகளில் குந்தி மாவட்டத்தில் லாட்ராடு அணைப் பகுதிக்கு சென்றனர். வழக்கமாக இது போன்று ஆட்சி கவிழும் அபாயங்கள் ஏற்படும்போது ஏம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டுகள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகியவற்றுக்குதான் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை இயற்கை எழில்சூழ்ந்த அணைப் பகுதிக்கு எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்றுள்ளார் ஹேமந்த் சோரன். அங்குள்ள விடுதிகளில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஹேமந்த் சோரன் திட்டமிட்டபடி எல்லாம் நடந்துமுடிந்துவிடவில்லை. ராஞ்சியிலிருந்து பேருந்தில் அவர் கிளம்பும்போது 49 எம்.எல்.ஏக்களில் 43 பேர்தான் வந்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ ஒருவரும் இந்த பயணத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வராததற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அணி வகுப்பு தொடங்குகிறதா?…ஆட்சிமாற்றம் நிகழ்வதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டதா?…என்கிற பரபரப்பு ஜார்க்கண்ட் அரசியலில் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜகவின்  அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர்தாசிடம்  கேட்டபோது. ஆளுநரின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். அத்தோடு அவர் நிறுத்தவில்லை ஜனநாயகத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் எனக் கூறி சஸ்பென்ஸ் வைத்தார். இதனால் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜக ஏதேனும் டிவிஸ்ட் வைத்திருக்கிறதா என்கிற பரபரப்பும் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.