“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்

ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், என அனைவருக்கும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஜெம் கிரனைட்ஸ் முதலாளி வீரமணி ஏழு முதல் 13 வயது வரை உள்ள ஆதரவற்ற சிறுமியர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மட்டுமே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள், கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இக்குற்றம் தொடர்பான ‘வீடியோ’க்கள் அடங்கிய பென் டிரைவ்களை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு இவ்வழக்கை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.