முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கல்வியை ஜனநாயகப்படுத்தியதால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகியது – ஜெயரஞ்சன்

கல்வியை ஜனநாயகப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் பிற
மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் ஆய்வு மையம் சார்பில்
முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்புப் பொழிவரங்கம் நடைபெற்றது. இதனையொட்டி,
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில், கலைஞர் கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பாலகுருநாதன் வரவேற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விழாவிற்கு தலைமை வகித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில், அரசியல், கலை, இலக்கியம் என பன்முகத் திறன்களை கொண்டவராக கலைஞர் திகழ்ந்தார். சமூக சீர்திருத்தங்களை தனது அரசியல் களம் மூலம் அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தந்தார். சமூக பாதுகாப்புத் திட்டங்களை அதிக அளவில் கொண்டு வந்துள்ளார். நில சீர்த்திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது. தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து தொழிற்சாலைகளை கொண்டு வந்தார். எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பதை அறிவித்து செயல்படுத்தியவர் கலைஞர். நூற்றுக்கணக்கான உழவர் சந்தைகளை உருவாக்கியதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப புரட்சி தமிழகத்தில் தொடங்க டைடல் பூங்கா உருவாக்கி அடித்தளம் இட்டவராக கலைஞர் திகழ்கிறார்.

கலைஞர் சிறப்புப் பொழிவரங்கில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன்
பேசுகையில், நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிராமங்கள் தோறும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன.1950கள் வரை நிலவுடைமையே பசி மற்றும் பட்டினியைத்
தீர்மானித்தது. நிலம் இருக்கிறவர்களை சார்ந்தே மற்றவர்கள் இயங்க முடிந்தது.
விடுதலைக்குப் பிறகும் கூட தொழில் துறை சிறிய அளவிலேயே இருந்தது. பெரும்
திரளான மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்காததால் வறுமை நீடித்தது.
ஆண்டுக்கு 120 நாட்கள் வரை வேலை கிடைத்தாலே பெரிய விஷயமாக இருந்தது.

சாதியக் கட்டமைப்பு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரிதாக இருந்த காலகட்டம் இருந்தது. சமூக சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இல்லாத காலத்தில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது மிகப் பெரிய சவாலாக இன்றைக்கும் இருக்கிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தினால் பொருளாதார மாற்றம் உருவாகும். உணவு மற்றும் கல்வி ஆகிய இரண்டு விஷயங்களை அடித்தளமாகக் கொண்டே பெரும்பாலான அரசுத் திட்டங்கள் அமைந்துள்ளன. உணவு தானியம் உற்பத்தியில் இலக்கை அடைந்தாலும், அதனை பொதுமக்களை அடைவதற்கான திட்டமிடல் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் கோவையில் மட்டுமே இருந்த ரேஷன் கார்டு செயல்பாட்டினை மாநிலம் முழுவதிற்குமாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மாற்றினார்.

கல்வியில் எல்லோரும் வந்து சேர வேண்டும். கல்வி ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இதை ஊக்குவிப்பதற்காகவே மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்தை ஏற்படுத்தி தருவதும் இதன் ஒரு பகுதியாகவே உள்ளது. 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் காரணமாகவே தமிழ்நாடு இன்று முன்ணணி மாநிலமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவைத் தாண்டி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கல்வி ஜனநாயகப்படுத்தியதால்தான் தமிழகம் வளர்ந்த மாநிலமாக மாறியது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. பீகார் போன்ற மாநிலங்களை நம்முடன் ஒப்பிட முடியாது. எண்ணிக்கையில் நாம் சாதித்து உள்ளோம். ஆனால் எண்ணிக்கையின் பின் இருக்கும் தரம் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெரும் பாய்ச்சலில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. கல்வி வேண்டும், கல்வியின் தரம் உயர வேண்டும். அண்மைத் தேவைகளுக்கேற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் செய்தால் மட்டுமே 5 மடங்கு வளர்ச்சி, 10 மடங்கு வளர்ச்சி என்கிற பாய்ச்சல் நிகழும். ஆரம்பக்கல்வியில் பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டது.

உயர் கல்வியின் தரம், உயர் கல்வி கற்போர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும். பெரும் பணியை அடித்தளம் இட்டுச் சென்றுள்ளார் கலைஞர். நம்மிடையே பெரும் கடமை காத்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் செயல்படும் இருக்கைகள் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. ஆஸ்திரியா, வியன்னா 6 பேராசிரியர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கினர். அவர்கள் ஏற்படுத்திய இருக்கைகள்தான் திட்டங்களை மேம்படுத்தின. ஆய்வு மாணவர்களை தயார் செய்வது, சமூகத்தில் இதுகுறித்த விவாதங்களை உருவாக்குவது போன்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளும் ஆய்வு இருக்கைகளின் செயல்பாடுகளால் சாத்தியமானது என்றார்.

இதையடுத்து, கலைஞர் ஆய்வு மையம் சார்பில் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவியரிடையே நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan Chinnasamy

‘திருக்குறள்தான் எனக்கு தைரியம் கொடுத்தது’ – பேரறிவாளன்

Arivazhagan Chinnasamy

தொடங்கியது ஐ.நா. உச்சி மாநாடு; பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

G SaravanaKumar