முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், கனகராஜின் அண்ணன் பழனிவேல் பணிக்கனூர் பகுதியில் கனகராஜின் பெயரில் உள்ள நிலத்தை விலைக்கு கேட்பதாக சென்னையில் வசிக்கும் கனகராஜின் மனைவி கலைவாணியை வரவழைத்துள்ளார்.
நிலம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பழனிவேலுக்கும், கலைவாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, கலைவாணி அளித்த புகாரால்தான் தனது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகாரை வாபஸ் பெறுமாறும் கலைவாணியை பழனிவேல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் கலைவாணி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின்பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பழனிவேலுவை போலீஸார் கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக கனகராஜின் மூத்த அண்ணன் தனபால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பழனிவேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
-ம.பவித்ரா







