திமுகவின் ஊதுகுழாலாக செயல்படும் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் எப்படி சேர்க்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக பொறுப்பேற்ற பிறகு எங்கும் எதிலும் ஊழல் தான் நடப்பதாக அப்போது அவர் குற்றம்சாட்டினார். ஆளுநரை தாங்கள் சந்திக்கும் போது அரசியல் பேசவில்லை எனக் கூறிய ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாகவே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
பாஜகவுடன் அதிமுகவிற்கு சுமூக உறவு உள்ளதாகவும் அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் கூறிய அவர், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று தெரிவித்த ஜெயக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அதிமுக கூட்டணியில் நிச்சயம் இடமில்லை என்றார். திமுகவின் ஊது குழலாக ஓ.பி.எஸ் செயல்படுவதாகக் கூறிய ஜெயக்குமார், அவரை எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். ஊரக வளர்ச்சித்துறை பிளக்ஸ் போர்டு விவகாரத்தில் உரிய ஆதராங்கள் இருப்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.







