20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
28 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் சார்பாக மண்ணடியில் அமைந்துள்ள தலைமையகத்தில் மனிதநேய மக்கள்
கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கொடியேற்றி வைத்து, இனிப்பு மற்றும்
நலத்திட்டங்களை வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28வது ஆண்டில் தமமுக என்ற மாபெரும் இயக்கம் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு எங்களின் கருப்பு வெள்ளை கொடி பல்வேறு இடங்களில் பறக்கவிடப்பட்டு வருகிறது. தடாவிற்கு பிறகு கொண்டு வந்த கருப்பு சட்டத்தையும் எதிர்த்து போராடி களம்கண்டோம். அதுமட்டுமின்றி சிறுபான்மையினத்திற்கு எதிராக நிகழ்ந்த பல சம்பவத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகிறோம்.
ஆளும் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளே இருக்காத வண்ணம் தன்னுடைய செயல்பாடுகளை செய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உறுதி ஏற்கிறது. மேலும், நீண்டகாலம் தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை கூடிய விரைவில் தமிழக முதலமைச்சர் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். 20 ஆண்டுக்கு மேலாக தமிழக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 6 தமிழர்கள் விடுதலை சாத்தியம் ஆகும் வரை அவர்களுக்கான நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
பில்கிஸ் பானு வழக்கில் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டு பலரும்
காத்திருக்கிறார்கள். ஆசியாவில் 300 ஆம்புலன்ஸ்களை வைத்து கொரோனா போன்ற பேரிடர்கள் காலத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. கருப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் இயக்கமாக தமுமுக இருந்து வருவோம் என்பதே இந்த தினத்தின் உறுதி மொழி.
அமைச்சர் கே.ன்.நேரு இயல்பாகவே நகைச்சுவையாக பேசுபவர். அவர் மேடையில் பேசிய முழு பேச்சையும் கேட்காமல் பாதி பேச்சை மட்டும் சமூக வலைத்தளங்களில்
கேட்டுவிட்டு அவரை பற்றி கருத்து சொல்வது நியாயம் இல்லை என்றார்.
-ம.பவித்ரா








