ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் தொழில் முறை பெண் ஓட்டுனராகியுள்ளார் கத்துவா பகுதியை சேர்ந்த பூஜா தேவி.
அரபு நாடுகளில் முதல்முறையாக பெண் ஒருவர் வாகனம் ஓட்டுகிறார் என்ற செய்தி வரும்போது அதனை ஆச்சரிமாக பார்த்தோம். ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக பூஜா தேவி என்பவர் முதல் பெண் தொழில் முறை ஓட்டுனராகியுள்ளார்.
ப்ளானி, சண்டார் உள்ளிட்ட கத்துவா மாவட்டப் பகுதிகளில் பேருந்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர்-கத்துவா வழித்தடத்தில் தனது முதல் பயணத்தை பூஜா தேவி தொடங்கினார். அவர் பேருந்து ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இதனை அறிந்த கத்துவா பகுதியின் காவல் துணை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ், பூஜா தேவியை நேரில் அழைத்து ஓட்டுனர் தொழிலை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டினார். பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரமான பூஜா தேவி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.
பூஜா தேவி மூன்று குழந்தைகளுக்கு தாய். அவருடைய முதல் பேருந்து இயக்கம் நடந்த கடந்த வாரத்தில் முதல் பயணிகளில் ஒருவராக அவரது மகனும் உடன் சென்றுள்ளார். தன்னுடைய உறவினரிடமிருந்து வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட பூஜா தேவி, எப்போதும் நான் ஓட்டுனராகவே விரும்பினேன் எனவும் கூறினார்.
அவரின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரில் முதல் பெண் ஓட்டுனர் உருவாகியுள்ளது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்டார்.







