அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக எண்ணுகிறது: முதல்வர் பழனிசாமி

கடவுளை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது “வேலை” கையில் எடுத்துவிட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலியகுளம் விநாயகர்…

கடவுளை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது “வேலை” கையில் எடுத்துவிட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவையில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், கடவுளை இழிவாக பேசியவர் கையிலேயே, இன்று முருகன் வேலை வழங்கியுள்ளார் எனக்கூறினார். உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றும் பேசும் ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார் எனவும், அதிமுகவுக்கே முருகன் வரம் கொடுப்பார் என்றும், அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக எண்ணுகிறது என்றும், தேர்தல் வந்துவிட்டதால் திமுக பகல் வேஷம் போடுகிறது எனவும் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, காளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஏழை எளிய மக்கள் ஏற்றம்பெற பல திட்டங்களை அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என கூறிய முதலமைச்சர் பழனிசாமி, அதனை தற்போது ஸ்டாலின் இயக்குவதாகவும், அடுத்து உதயநிதி இயக்குவார் என்றும் சாடினார்.இதனையடுத்து, சிங்காநல்லூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்த அவர், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். கோவையில் ராணுவ வழித்தடம் அமைக்க பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கூடுதலாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். அடுத்ததாக, கரியாம்பாளையத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், தொண்டர் ஒருவரது வீட்டிற்கு சென்றார்.

கட்சி நிர்வாகிகளுடன் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார். இதையடுத்து, அன்னூர் பிரச்சாரத்தில் பேசிய அவர், அத்திக்கடவு-அவினாசி திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இந்த பகுதிகளில் வறட்சி நீங்கும் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என சாடிய அவர், ஊழல் என்ற வார்த்தை தமிழகத்தில் முளைத்தது அந்த ஆட்சியில் தான் என குற்றம்சாட்டினார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் நிலையை உயர்வடையச் செய்வதாக இருக்கும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply