இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அந்த ஒரு விக்கெட்டுக்காக ஏழு வருடம் காத்திருந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 183 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடர்கிறது. நேற்றைய போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புஜாரா, விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார்.
விராத் விக்கெட்டை எடுத்ததும் அவர் அதிக உற்சாகமாக காணப்பட்டார். அவர் விக்கெட்டை வீழ்த்த ஆண்டர்சன் ஏழு வருடங்கள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் விராத் கோலியை 4 முறை ஆட்டமிழக்க செய்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆனால், 2018 ஆம் ஆண்டு, இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, கோலியின் விக்கெட்டை ஆண்டர்சனால் வீழ்த்த முடியவில்லை.
இப்போது, முதல் போட்டியிலேயே கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார். அதாவது ஏழு வருடங்களுக்கு பிறகு கோலி விக்கெட்டை அவர் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராத் கோலியின் விக்கெட்டை 9ஆவது முறையாக அவர் வீழ்த்தி இருக்கிறார்.
இதுபற்றி ஆண்டர்சன் கூறும்போது, அவருக்கு ஏற்கனவே சவால் விட்டதாக நினைக் கிறேன். அதே போல எந்த இடத்தில் பந்தை வீசினால் அவர் விக்கெட்டை இழப்பார் என சரியாக கணித்தே, பந்தை வீசினேன். நினைத்தபடியே அவர் ஆட்டமிழந்தார். விராத் கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது சாதாரணமானதல்ல. அதனால் அதிக உற்சாகமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.









