நாகலாந்து சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாகலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையடுத்து, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாகலாந்தில் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இதில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்ற நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலஅவகாசம் பிப்ரவரி 10ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், நாகலாந்தில் அகுலுட்டோ சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக கெகாஷே சுமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவை வாபஸ் பெற்றதால், பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








