மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து அரசு மௌனம் காப்பது வருந்தத்தக்கது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.
கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.
2016-ல் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வென்ற வெண்கலப் பத்தக்கத்தை வென்ற சாக்ஷி மாலிக்கும், டோக்கியோவில் 2020-ல் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், உலக சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ் போகத்தும் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/beemji/status/1663596304860327936
இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ”உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றிய சாம்பியன்கள் எந்த விதமான கண்ணியமும் , மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளனர். வெற்றியாளர்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்காதது வருந்தத்தக்கது. மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.







