ராகுல்காந்தி தனது வெளிநாட்டு பயணங்களின் போது தொடர்ந்து இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சான்பிரான்சிஸ்கோவில் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் உரையாற்றும் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் பாஜக
மக்களை அச்சுறுத்துவதாகவும், அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்கி ஆளுவதற்காக, அவர்களின வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தவும் அரசு நிறுவனங்களைப்
பயன்படுத்துவதாக அவர் சுட்டி காட்டியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க மத்திய அரசு எல்லா வகையிலும் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டிய ராகுல், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கியது ஒரு அரசியல் ஸ்டண்ட் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த செயல் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்களில் தொடர்ந்து இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவமதித்து வருவதாகவும், அவர் இந்தியாவை ஒரு தேசமாகக் கூட கருதவில்லை, அதை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவது தவறான ஒன்று என கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்து, இந்தியா வளர்ச்சி
குறித்து ஆலோசனை நடத்தியபோது, ஒரு சமயம் ‘பிரதமர் மோடி தான் பாஸ்’ என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய அனுராக் தாக்கூர், ஒருவேளை ராகுல் காந்தியால் இதை ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். அதனால் தான் இப்படி பேசுகிறார். இந்தியா மீது இந்த உலக நாடுகளே ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருப்பதை பார்க்கும்போது, அதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை என்று தாக்கூர் காட்டமாக
பேசியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், இங்கிலாந்துக்கு ஒரு வார கால சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்றிருந்த போது ஆளும் பாஜக குறித்து கடுமையாக பேசியதால், பெரும் விவாதத்திற்கு உள்ளாகி நாடாளுமன்ற அமர்வே சில நாட்கள் முடங்கிபோகின என்பது
குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா








