முக்கியச் செய்திகள் தமிழகம்

“நட்டத்தைக் காரணம் காட்டி திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல” – கமல்ஹாசன்

“சிறிய நட்டத்தைக் காரணம் காட்டி நல்ல திட்டங்களைச் சிதைப்பது அரசுக்கு அழகல்ல” என அம்மா உணவகம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். மலிவு விலையில் இங்கே வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்குப் பின் பன்மடங்கு பெருகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்றுவருகின்றன. தி.மு.க அரசும் `அம்மா உணவகங்களைக் கைவிடும் எண்ணமில்லை’ என அறிவித்திருந்தது. ஆனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்கப்பட்டுவந்தது. இது அரசு மருத்துவமனை நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோர் போன்றோருக்குப் பயனுள்ளதாக இருந்தது. இப்போது திடீர் மாற்றமாக சப்பாத்திக்குப் பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. மேலும், அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களை திடீரென பணிநீக்கமும், பணியிட மாற்றமும் செய்வதும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றிவருவதாகச் சொல்கின்றன ஊடகங்கள்.

`இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம்’ என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயைப் பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நட்டத்தைக் காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களைச் சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல. இத்திட்டத்தின்கீழ் பலனடையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

உணவு, மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும்போது, அதைக் குறைந்த விலையில் தரும் திட்டத்திற்குச் செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது. `அம்மா உணவகத் திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாகத் தொடரும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிரானதாக உள்ளன. ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்தத் திட்டத்தை, முந்தைய ஆட்சியாளர்களைவிட சிறப்பாகச் செயல்படுத்துவதே அரசுக்குப் பெருமை தருவதாக இருக்க முடியும்.

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாகச் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.” என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சேலத்தில் தொடங்கிய சர்வதேச பூனைகள் கண்காட்சி

Web Editor

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படுமா?

Web Editor

கிராமந்தோறும் மதவெறியைப் பரப்பி வருகிறார்கள் ; திருமாவளவன்

Halley Karthik