ஆளுநர் செயல்பாடு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமனல புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் காதணிவிழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை தொடங்கிய எம் ஜி ஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார் என்றார். பின்னர் அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் தொடண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இனைந்து 50 ஆண்டுகள் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக வளர்த்தனர். இதனால், அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். மேலும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை என தெரிவித்தார். அப்படி அமைந்தால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன் எனக் கூறி புறப்பட்டு சென்றார்.








