மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்

புதுக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் மழைநீர் தேங்கிய கண்மாயில் இறங்கி சென்று உடலை அடக்கம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கெண்டையன்…

புதுக்கோட்டை அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் மழைநீர் தேங்கிய கண்மாயில் இறங்கி சென்று உடலை அடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் கெண்டையன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகெண்டையார். இவர் உடல்நலக்குறைவால் நேற்று இயற்கை மரணம் அடைந்தார். இவரது உடலை எடுத்துச் செல்ல பொது பாதை இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா புதுக்குளம் மற்றும் பெரிய குளத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் இறங்கி கழுத்தளவு நீர் மட்டம் கொண்ட இரண்டு குளங்களையும் கடந்து பிரேத உடலை தகனம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றோம். இதுகுறித்து அனைத்து அரசு தரப்பினருக்கும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மயானம் செல்வதற்கு பொதுப்பாதை வழங்கியும், மயான கொட்டகை அமைத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என கொண்டையம்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.